லஞ்சம் கொடுக்கணும்; அப்போதான் அணியில் இடம் - சாடிய முன்னாள் உலகக்கோப்பை சாம்பியன்
முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் பிசிசிஐ குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நெருங்கும் தேர்தல்
டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்புக்கான தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ரோகன் ஜெட்லி மற்றும் கீர்த்தி ஆசாத் போட்டியிடுகின்றனர்.
ரோகன் ஜெட்லி மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன். மாநில கிரிக்கெட் அமைப்பில் பல்வேறு பதவிகளில் இடம் பெற்று வருகிறார். 1983 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் கீர்த்தி ஆசாத்.
கீர்த்தி ஆசாத் குற்றச்சாட்டு
டெல்லி மாநில அணிக்காக 95 ரஞ்சி ட்ராபி போட்டிகளில் ஆடி உள்ளார். இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், டெல்லி மாநில அணிக்காக தனது பள்ளி பருவத்தில் இருந்து விளையாடி உள்ளேன். டெல்லி கிரிக்கெட் மைதானத்துடன் தனக்கு உணர்வுபூர்வமான பந்தம் இருக்கிறது.
ஆனால் இங்கு நிறைய ஊழல் நடக்கிறது. டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் இயக்குனர்களின் குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதும், ஒரு வீரரை அணியில் தேர்வு செய்வதற்கு லஞ்சம் வாங்கப்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.
திறமையான இளம் வீரர்களுக்கு பதிலாக மற்றவர்கள் தேர்வு செய்யப்படுவது தன்னை காயப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.