இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. தாக்குதலின் நடுவே கேரள பெண்களின் வீரமிக்க செயல் - குவியும் பாராட்டு!
போர் நடக்கும்போது இந்திய பெண்கள் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேல் போர்
காசா எல்லை அருகே நிர் ஓஸ் என்ற இடத்தில் ராகேல் என்ற மூதாட்டி வசித்து வந்தார். இவர் ஏஎல்எஸ் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். இவரை கேரளாவைச் சேர்ந்த சபிதா மற்றும் மீரா மோகனன் என்ற இரு பெண்கள் கவனித்து வந்துள்ளனர்.
கடந்த 7-ம் தேதி அன்று காலை 6.30 மணியளவில், சபிதா இரவுப் பணியை முடித்து விட்டு புறப்பட தயாரானார். அப்போது அபாய ஒலி சத்தம் கேட்டது. உடனே அவர்கள் பாதுகாப்பு அறைக்கு சென்று தங்கினர். அப்போது ராகேலின் மகள் போன் செய்து, வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு உள்ளே இருக்கும்படி எச்சரிக்கை விடுத்தார்.
வீரமிக்க பெண்கள்
இந்நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் வந்து ஜன்னல் கதவுகளை உடைத்தனர். அப்பொழுது சபிதாவும், மீராவும் தங்கள் காலணியை கழற்றி வைத்துவிட்டு, தரையில் காலை ஊன்றியபடி, கதவை திறக்கவிடாமல் பிடித்துக் கொண்டனர். தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியும், கேரள பெண்கள் கதவை திறக்காமல் இறுக பிடித்துக் கொண்டனர்.
தீவிரவாதிகள் சென்றபின் மதியம் 1 மணியளவில் மீண்டும் கதவை தட்டும் சத்தம் கேட்டது. அவர்கள் இஸ்ரேல் ராணுவத்தினர். அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். மூதாட்டியை காத்த துணிச்சல்மிக்க இந்த கேரள பெண்களின் செயலை இஸ்ரேல் பாராட்டியுள்ளது. அவர்களின் பேட்டியை இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.