ICU-வில் அம்மா.. பசியால் அழுத 4 மாத குழந்தை - பெண் போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!
வேறொருவரின் 4 மாத கைக்குழந்தைக்கு கேரள பெண் காவலர் ஒருவர் தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெண் காவலர்
பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இதனால் அந்த பெண்ணின் 4 குழந்தைகள் வார்டுக்கு வெளியே இருந்தனர். அதில் ஒரு குழந்தை பிறந்து 4 மாதமே ஆகியிருந்த நிலையில், தாயின் அருகே படுக்கையில் அனுமதிக்கப்பட்டது.
நெகிழ்ச்சி செயல்
இந்நிலையில் குழந்தைகளை பராமரிக்க யாரும் இல்லாததால், உதவிக்காக கொச்சி நகர மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு மூன்று குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
அதில், 4 மாத கைக்குழந்தை அழுதபடியே இருந்ததால், பெண் காவலர் ஆர்யா என்பவர் முன்வந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உதவினார். வயிற்றில் சுமக்கப்படாவிட்டாலும், தன் தாய்ப்பாலை கொடுத்த அந்த பெண் காவலரின் நெகிழ்ச்சி செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.