கருணாநிதி நினைவு நாணயம்; ஒன்றிய அரசு அனுமதி - நிதியமைச்சகம் முக்கிய உத்தரவு!
கருணாநிதியின் நினைவுநாணயத்திற்கு ஒன்றிய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கருணாநிதி நாணயம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியுள்ளது.
அதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம்வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் மூலம் கோரப்பட்டது. தொடர்ந்து, கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் வெளியிடத் திட்ட மிடப்பட்டிருந்தது.
ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது. தற்போது நாணயத்திற்கான அனுமதியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெப்பம் இட்டதாக கூறப்படுகிறது.
ஒன்றிய அமைச்சகம் அனுமதி
அதன் அடிப்படையில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்துடன், மேலும் இரண்டுநாணயத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் கெஜட்டிலும் விரைவில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்றபெயருடன்,
‘தமிழ் வெல்லும்’ எனும் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெறவுள்ளது.
முன்னதாக முன்னாள் முதல்வர்களான காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைவர்கள், பல்வேறு கலைஞர்கள் உள்ளிட்டோர் மீதான பல நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.