கலைஞர் கருணாநிதி எனக்கு அப்பா மாதிரி.... - மேடையில் இளையராஜா உருக்கப் பேச்சு
இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரின் பிறந்தநாளை தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இன்று காலையில், தன்னுடைய தந்தையும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக தொண்டர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம், இனிப்பு, கேக் ஆகியவற்றை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
நேற்று இசைஞானி இளையராஜா தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட அவர் பேசியதாவது -
எனக்கு என் அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். பின்னர் பள்ளியில் எனக்கு ராசையா என்று பெயர் மாற்றினார்கள். நான் இசை கற்றுக்கொள்ள சென்றேன். அப்போது, என் ஆசிரியர் உன் பெயர் என்னடா என்று கேட்டார். நான் ராசையா என்றேன். ஆனால் அவர் ராசையா நல்லா இல்லை... நீ ராஜா என்று மாற்றிக்கொள் என்று சொன்னார். அப்புறம் சினிமாவில் இசையமைக்க வாய்ப்பு கிடைச்சதும் நான் ‘பாவலர் பிரதர்ஸ்னு’ போடுங்கனு சொன்னேன்.
அதெல்லாம் பழசு.. நீ ராஜானே போட்டுக்கோனு சொல்லிட்டாங்க. முன்னரே, ஏவிஎம் ராஜா இருக்கிறார். அவர் மூத்த ராஜாவா இருக்கட்டும், நீ இளைய ராஜானு வச்சிக்கோனு சொல்லி தான் எனக்கு இந்த பெயர் வந்தது.
இதெல்லாம் நான் வைத்த பெயர் கிடையாது. ஆனால், எனக்கு இசைஞானி என்று பெயர் வைத்தவர் கலைஞர் கருணாநிதி. அவர் என் தந்தைக்கு சமமானவர். என் தந்தை வைத்த ‘ஞான தேசிகன்’ என்ற பெயரில் அவர் இசையை சேர்த்துவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.