அரிசி வியாபாரி வீட்டில் 300 பவுன் கொள்ளை - அதிரவைக்கும் கொள்ளையர்களின் சதி திட்டம்!
அரிசி வியாபாரி வீட்டில் 300 சவரன் தங்க நகைகள், ரூ.1 கோடி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரிசி வியாபாரி
கேரள மாநிலம் எண்ணூர் அடுத்த வளப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் அரிசி வியாபாரி கே.பி.அஷ்ரப். இவர் மதுரையில் உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ள இவர் தனது குடும்பத்தோடு சென்றார். இந்த நிலையில் மதுரையிலிருந்து விமானத்தில் திரும்பி வந்த அஷ்ரப், வீட்டு கதவுகள் திறக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது 300 சவரன் தங்க நகைகள், ரூ.1 கோடி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் . அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கடந்த சனி அன்று இரவில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் அஷ்ரப் சமையல் அறையில் உள்ள எக்சாஸ்ட் பேன் துளையின் வழியாக வீட்டிற்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். அப்போது வீட்டின் படுக்கை அறைக்குள் நுழைந்து அலமாறியில் இருந்த லாக்கர் சாவியை எடுத்துள்ளனர்.
கொள்ளை
பின்னர் சாவி மூலம் லாக்கரை திறந்து அதிலிருந்த 300 சவரன் நகைகள் மற்றும் ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது 3 கொள்ளையர்கள் சேர்ந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் அஷ்ரப் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களைப் பிடிப்பதற்கான முயற்சியில் கண்ணூர் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.