ஆர்எஸ்எஸ் முகாமா கள்ளக்குறிச்சி பள்ளி? - இணையத்தில் வெளியாகும் புகைப்படங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கலவரமான கள்ளக்குறிச்சி
மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர் மற்றும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் தகவல் அறிந்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி தனிக்குழு கள்ளக்குறிச்சிக்கு வரவைக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் வந்தது.'
இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக 329 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 4 வது நாளான நேற்று சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.
தீ வைத்த போரட்டக்காரர்கள்
பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. மேலும் சிலர் பள்ளியிலிருந்து மேசை, நாற்காலிகள், குளிர்சாதன பெட்டிகளை திருடிச் சென்றனர். இந்த வன்முறை தொடர்பாக 350 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ள நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தாளாளர் கைது
வாட்ஸ் அப் குழுமம் ஒன்றை தொடங்கி போராட்டத்துக்கு ஆட்களை திரட்டியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார் பாஜகவின் தமிழ் வளர்ச்சிக்குழுவின் முன்னாள் மாநில அமைப்பாளராக இருந்துள்ளதாவும், ஹெச்.ராஜா நடத்தி வரும் இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தில் அவர் பங்கேற்றுள்ளதாகவும், ஹெச்.ராஜாவுடன் மேடையில் அவர் நிற்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன
ஆர்.எஸ்.எஸ். கூடாரமா
அதேபோல், இந்த சக்தி இண்டெர்நேஷனல் பள்ளியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்று உள்ளது அப்போதே ஊடகங்களிலும் செய்தியாகி இருக்கிறது.
கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்திலிருந்து 120 பேர் கலந்துகொண்ட இந்த முகாமில் தேச பக்தி, ராணுவ நடைபயிற்சி, சிலம்பம், கராத்தே போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதற்கு முன்பாகவும் அங்கு பலமுறை ஆர்.எஸ்.எஸ். சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.