சமாதி நிலையில் இருந்த சமண துறவி வித்யாசாகர் மகராஜ் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்!
சமண துறவி வித்யாசாகர் மகராஜ் மறைவையொட்டி பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வித்யாசாகர் மகராஜ்
சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கர் என்ற இடத்தில் சமண மதத்தினர் வழிபடும் சந்திரகிரி தீர்த்தம் உள்ளது. இங்கு கடந்த 6 மாதங்களாக சமணத் துறவியான ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ் (77) தங்கியிருந்தார்.
கடந்த சில நாட்களாக அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், உணவோ, தண்ணீரோ எடுத்துக்கொள்ளாமல் கடந்த 3 நாட்களாக சமாதி நிலையில் இருந்த வித்யாசாகர் மகராஜ் நேற்று காலமானார்.
அவரது மறைவு ஜெயின் சமய மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர் ஆசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் இரங்கல்
இந்நிலையில், வித்யாசாகர் மகராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி "ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
மக்களிடையே ஆன்மீக எழுச்சிக்காக அவர் ஆற்றிய மதிப்புமிக்க முயற்சிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்.அவரது ஆசிகளை நான் தொடர்ந்து பெறுவது எனது அதிர்ஷ்டம் என்று, கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் உள்ள சந்திரகிரி ஜெயின் கோயிலில் அவருடனான சந்திப்பு எனக்கு மறக்க முடியாததாக இருக்கும்.
அப்போது நான் ஆச்சார்யா ஜியிடம் நிறைய அன்பையும் ஆசிகளையும் பெற்றிருந்தேன். சமுதாயத்தில் அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பு நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.