சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பனைமரம் போன்ற தடைச் சுவர் காங்கிரஸ் தான் - பிரதமர் மோடி விமர்சனம்!
சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பனைமரம் போன்ற ஒரு தடைச் சுவர் காங்கிரஸ் கட்சிதான் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
சூறாவளி சுற்றுப் பயணம்
பிரதமர் மோடி உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் 2 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தில் ரூ.50,000 கோடி மதிப்பிலான சுமார் 50 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தநிலையில், சத்தீஸ்கருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ரூ 3,750 கோடி சாலை திட்டம் உட்பட ரூ.7,500 கோடி மதிப்புள்ள திட்டங்களைதொடங்கி வைத்தார்.அதன் பின் ராய்பூரில் உள்ள விஜய் சங்கல்ப் மஹாரலியில் நடந்த பொதுகூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
பனைமரம் போன்ற ஒரு தடைச் சுவர் காங்கிரஸ் கட்சிதான்
பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் " சத்தீஸ்கரின் வளர்ச்சி பயணத்தில் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்த மாநிலம் இன்று ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைப் பரிசாக பெற்றுள்ளது. இது உள்கட்டமைப்பு, இணைப்பு வசதி மற்றும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.
இயற்கை வளங்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. அரசின் நடவடிக்கைகள் சத்திஸ்கரில் தொழில்மயமாக்கலை வலுப்படுத்தியுள்ளது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் சத்தீஸ்கரில் 20 சதவீதத்துக்கு அதிகமான கிராமங்களுக்கு எந்தவிதமான மொபைல் இணைப்புகளும் இல்லை. இப்போது அது 6 சதவீதமாக குறைந்துள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர் "சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் ஆக மாறியுள்ளது.
ஊழல் என்பது மதுவில் மட்டும் இல்லை; சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடக்காத துறைகளே இல்லை. சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சியின் முன்னால் பனை போல ஒரு தடைச் சுவர் உள்ளது. உங்களிடமிருந்து உங்கள் உரிமைகளைப் பறிக்கும் காங்கிரஸ் கட்சியே அந்தத் தடைச் சுவர். அந்த தடைச் சுவர் சத்தீஸ்கரை கொள்ளையடித்து நாசமாக்க முடிவு செய்துள்ளது" என காங்கிரஸ் கட்சியின் மீது கடுமையாக குற்றம் சாட்டினார் பிரதமர் மோடி .