இறந்தும் காதலியை காப்பாற்றிய காதலன்.. தாக்குதலில் தப்பிய பெண் உருக்கம்!
ஹமாஸ் தாக்குதலில் உயிர் தப்பிய பெண் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
போர்
இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஹமாஸ் முதலில் இஸ்ரேலியர்கள் கலந்துகொண்ட இசை விழாவில் தாக்கியபொழுது பலர் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலில் உயிர் தப்பிய 27 வயதான மாடல் நோம் பென்-டேவிட் என்ற பெண் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "நான் என் பார்ட்னர் டேவிட் நேமனோடு சேர்ந்து அக்டோபர் 7-ம் தேதி காலை 6.30 மணியளவில் சூப்பர்நோவா விழாவிற்குச் சென்றேன். அப்போது திடீரென ஒரு வெடிச் சத்தம் அதிரும்படியாகக் கேட்டது.
அந்த இடத்தில் இருந்து வெளியேற காரில் ஏறினோம். ஆனால் வெளியேறும் வழி அடைக்கப்பட்டு யாரும் செல்ல இயலாதபடி செய்யப்பட்டு இருந்தது".
பெண் வேதனை
இதனை தொடர்ந்து, "அங்கிருந்த செக்யூரிட்டி ஒருவர் ஓடி வந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஓடுங்கள் என்று கத்தினார். அவர்கள் எல்லா இடங்களிலும் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டிருந்தனர். 14 பேரோடு சேர்ந்து ஒரு பெரிய குப்பைத் தொட்டியில் நாங்கள் இருவரும் மூன்று மணிநேரம் மறைந்து இருந்தோம்.
நாங்கள் அனைவரும் எங்கள் மொபைல் போன்களில் எங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து, எங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொண்டு, உதவிக்காக மன்றாடிக் கொண்டு இருந்தோம். துப்பாக்கி ஏந்திய ஒருவர் எங்களைக் கண்டுபிடித்து என் காதலனை மார்பில் சுட்டார். அவர்கள் எங்களை முற்றிலும் வளைத்து இடைவிடாமல் சுட்டுக் கொண்டே இருந்தார்கள்.
எனக்குக் காலிலும் இடுப்பிலும் துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டது. எனக்குக் காயங்கள் இருந்தபோதும் இரண்டு மணிநேரம் எந்தச் சத்தமும் ஏற்படுத்தாமல் பிணக் குவியல்களுக்கு மத்தியில் அமைதியாக இருந்தேன்.
என் பார்ட்னரின் சடலத்திற்குக் கீழ் மறைந்து இருந்தேன். உடல்களின் குவியலுக்கு மத்தியில் நான் இருந்ததால் இறந்துவிட்டதாக அவர்கள் கருதினார்கள். அங்கே குப்பைத் தொட்டியில் மறைந்திருந்த 16 பேரில் நால்வர் உயிர் பிழைத்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.