பள்ளிக்கூடத்தில் கொடூர தாக்குதல்; குறிவைத்த இஸ்ரேல் - சிறுவர்கள் உட்பட 39 பேர் பலி!
பள்ளிக் கட்டிடம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, போரை நிறுத்த கேட்டுக்கொண்டது. ஆனால் எதற்கும் இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை.
39 பேர் பலி
இஸ்ரேல் பாதுகாப்புப்படை, ராஃபா எல்லையில் அகதிகள் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதில், 45 பேர் பலியாகினர். இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் தங்கியிருந்த ஐ.நா பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதில், சிறுவர்கள் உட்பட 39 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், பாலஸ்தீனர்களுக்கு உதவி வழங்கும் ஐக்கிய நாடுகளின் நிறுவனம் நடத்தும் பள்ளியை போர் விமானங்கள் மூலம் தாக்கியதாக கூறியுள்ள இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரும்,
இஸ்லாமிய ஜிஹாத்தும் தங்கள் குற்றச்செயல்களுக்கு பள்ளியைப் பயன்படுத்தியதாக ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், தாக்குதலுக்கு முன் பொதுமக்களுக்கு ஆபத்து வராத முறையில் வான்வழி கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல் மூலம் கண்காணித்தே தாக்குதல் முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.