All Eyes on Rafah: எதனால் டிரெண்டிங்? இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பும் உலக பிரபலங்கள்!
ராஃபா எல்லையில் இஸ்ரேல் கொடூர தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ்
ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, போரை நிறுத்த கேட்டுக்கொண்டது. ஆனால் எதற்கும் இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை.
ராஃபா எல்லையில் தாக்குதல்
போரின் காரணமாக உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர். இதற்காக உணவு, குடிநீர் தேடி எகிப்து எல்லையான ராஃபாவில் பாலஸ்தீன மக்கள் குவிந்துள்ளனர்.
ராஃபா எல்லையை கடந்துவிட்டால் எகிப்துக்கு சென்றுவிடலாம். ஆனால், எகிப்து இவர்களை அனுமதிக்காமல் அடிப்படை தேவைகளை மட்டும் செய்து வருகிறது. உலக நாடுகள் அனுப்பும் மருந்துகளும், உணவும் ராஃபா எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கண்டனங்கள்
இந்த உதவிகள் பாலஸ்தீன மக்களை சென்று சேர்வதை இஸ்ரேல் தடுத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்களை வீசி தாக்குதலை நடத்தியது. இதில் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை, ராஃபா எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 45 பேர் பலியாகியுள்ளனர். குழந்தைகள் தான் அதிகம்.
தற்போது இச்சம்பவம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து, பிரபலங்கள் இத்தாக்குதலுக்கு எதிராக 'All Eyes on Rafah' எனும் ஹாஷ்டேகை டிரெண்ட் செய்து கொதித்தெழுந்து வருகிறார்கள். சர்வதேச கண்டனங்களுக்கு இடையிலும், ரஃபாவில் கடுமையான தாக்குதலை நடத்தி மையப்பகுதி வரை இஸ்ரேல் முன்னேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.