36 ஆயிரம் பேர் பலி; இன்னும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் போர் - எகிறும் இஸ்ரேல்!
பாலஸ்தீன போர் 7 மாதங்கள் நீடிக்கும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ்
ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, போரை நிறுத்த கேட்டுக்கொண்டது. ஆனால் எதற்கும் இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை.
7 மாத கால அவகாசம்
இஸ்ரேல் பாதுகாப்புப்படை, ராஃபா எல்லையில் அகதிகள் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதில், 45 பேர் பலியாகியுள்ளனர். குழந்தைகள் தான் அதிகம். இச்சம்பவம் சர்வதேச அளவில் கவனம் பெற்று, பல பிரபலங்கள் இத்தாக்குதலுக்கு எதிராக 'All Eyes on Rafah' எனும் ஹாஷ்டேகை டிரெண்ட் செய்து கொதித்தெழுந்து வருகிறார்கள்.
இந்நிலையில், பாலஸ்தீனம் மீதான போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டீசச்சி ஹனேஜிபி, "நாங்கள் இப்போது 2024ம் ஆண்டின் 5வது மாதத்தில் இருக்கிறோம்.
ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத்தின் ராணுவத்தையும், அரசாங்கத்தையும் அழிக்க எங்களுக்கு இன்னும் 7 மாத கால அவகாசம் தேவைப்படும்" எனத் தெரிவித்துள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.