24 மணி நேரத்தில் 68 பேர் பலி; போலியோவை தடுக்க போர் நிறுத்தம் - களத்தில் ஐநா
போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போலியோ அச்சுறுத்தல்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கமாக கொண்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியுள்ளது. போரில் இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் உயிரிழந்துள்ளனர்.
போர் நிறுத்தம்
23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் உச்சத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், காசாவில் மீண்டும் போலியோ அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், மனிதாபிமானத்தின் அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பும் முன்வந்துள்ளது. இதில், சுமார் 6.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை ஐநா சுகாதார செயற்பாட்டாளர்கள் செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 77 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.