Asian Games: ஆடாம ஜெயிச்சோமடா..போட்டி நடக்காமலேயே தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி!
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டில் தங்கம் வென்றது இந்தியா.
ஆசிய விளையாட்டு
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 112 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை தொடர்ந்ததால், போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கிரிக்கெட்டில் தங்கம்
இந்நிலையில் தரவரிசைப்படி இந்தியா முன்னணியில் இருந்ததால், இந்தியா தங்கம் வென்றதாகவும், ஆப்கானிஸ்தான் வெள்ளி வென்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் முதன்முறையாக ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்ற இந்திய மகளிர் பிரிவு, ஆடவர் பிரிவு என இரண்டிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளது இந்தியா.
ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது இந்தியா. மேலும், ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் முறையாக 100 பதக்கங்களை இந்தியா தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.