இந்தியாவில் இருப்பது எப்படியிருக்கிறது? பாக். கேப்டன் பாபர் அசாம் சொன்ன நெகிழ்ச்சி பதில்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் தனது இந்திய அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
உலகக் கோப்பை
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் இன்று தொடங்குகிறது . இந்த தொடரானது நவம்பர் மாதம் 19ம் தேதி முடிவடைய உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி, இந்தியா வந்து ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர்.
அண்மையில் "கேப்டன்ஸ் மீட்" என்ற பெயரில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை வர்ணனையாளர் ரவி சாஸ்திரி மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் தொகுத்து வழங்கினர்.
பாபர் அசாம்
அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிடம், முதல்முறையாக இந்தியா வந்த அனுபவம் குறித்து ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பாபர் அசாம் "இந்திய மண்ணில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பும், மரியாதையும் ஆச்சரியமாக உள்ளது.
இந்திய மண்ணில் எங்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் அன்பை பொழிவார்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. எங்களின் சொந்த வீட்டில் இருப்பது போல் உணர்கிறோம்' என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.