அமலாக்கத்துறை குறிவைக்கும் ‛இந்தியா’ கூட்டணி தலைகள் - 5-வது சம்மனையும் புறக்கணிக்கும் கெஜ்ரிவால்!
அமலாக்கத் துறையின் 5-வது சம்மனையும் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத் துறை
வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், நில சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதேபோல் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
கெஜ்ரிவால் புறக்கணிப்பு
இவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்து வருகிறார். இருப்பினும் மீண்டும் 5வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்றும் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்து டெல்லி அரசை கவிழ்ப்பதே பிரதமர் மோடியின் நோக்கம் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
‛இந்தியா' கூட்டணி
பீகாரில், ஆர்ஜேடி கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ், அவரது மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், உத்தரப் பிரதேசம் எதிர்க்கட்சி தலைவராக உள்ள அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜி,
கேரளா முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி என இந்தியா கூட்டணியில் உள்ள பலர் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.