பும்ரா ஏமாற்றுகிறார்; உடனே தொண்டையை கடிக்காதீங்க - கொந்தளித்த ஆஸ்., வர்ணனையாளர்!
பும்ரா பவுலிங் குறித்து ஆஸ்திரேலிய வர்ணனையாளர் சாடியுள்ளார்.
பும்ரா பவுலிங்
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
தொடர்ந்து நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் தடுமாறி வருகின்றனர்.
வர்ணனையாளர் தாக்கு
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வர்ணனையாளர் இயான் மவுரிஸ், நான் பும்ரா பந்தை எறிவதாக கூறவில்லை. ஆனால் அவர் பந்து வீசும் முறையில் தவறு இருக்கிறது. பந்து வீசும் போது அவருடைய கை கொஞ்சம் மாறி இருக்கிறது.
இதை யாருமே கவனிப்பதில்லை. பும்ராவின் பந்துவீச்சு குறித்து நாம் கண்காணிக்க வேண்டும். இதை சொல்வதற்காக உடனே என்னுடைய தொண்டையை வந்து யாரும் கடிக்காதீர்கள். நான் அவர் பந்தை எறிவதாக குறை கூறவில்லை.
ஆனால் அவருடைய பந்து வீசும் முறையை கண்காணிக்க வேண்டும் என்று தான் மீண்டும் வலியுறுத்துகிறேன் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.