தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.4000 ஊக்கத்தொகை - பாராட்டு தெரிவித்த முதலமைச்சர்
தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணி
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
அந்த வகையில், 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஊக்கத்தொகை
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றி,
தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். 46,727.66 மெட்ரிக் டன் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
கடினமான இச்சூழ்நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குப்பைகளை அகற்றிடும் பணிகளை மேற்கொண்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை தமிழக முதல்வர் பாராட்டி ஊக்கத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.