காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் மீது புல்டோசர் ஓட்டுவார்கள் - பிரதமர் மோடி ஆவேசம்!
சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் இடிக்கப்படும் என்று மோடி கூறியுள்ளார்.
ராமர் கோயில் மீது புல்டோசர்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. அதில் ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.
இதற்காக அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் மீண்டும் கூடாரத்தில் இருப்பார்.
அவர்கள் அயோத்தி ராமர் கோயிலின் மீது புல்டோசர் ஓட்டுவார்கள். புல்டோசரை எங்கு இயக்க வேண்டும், எங்கு இயக்கக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்வதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் பயிற்சி எடுக்க வேண்டும் " என்று பேசியுள்ளார்.
பிரதமர் மோடி ஆவேசம்
தொடர்ந்து பேசிய அவர், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது. மறுபுறம், இந்தியா கூட்டணி குழப்பங்களை உருவாக்குகிறது. தேர்தல்கள் முடிவடையும் நிலையில், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் பிரிந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஹாட்ரிக் சாதனை படைக்கும். சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றியமைக்க காங்கிரஸின் திட்டம் உண்மையாகிவிடும்.
இது எப்படி சாத்தியம் என்றால் சுதந்திரப் போராட்டத்தின் போது நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று அவர்கள் பேசிய போது, நாட்டைப் பிரிக்க முடியாது என்று மக்கள் கூறினார்கள். ஆனால், அவர்கள் நாட்டை பிரித்தார்கள். அவர்களுக்கு நாடெல்லாம் ஒன்றும் இல்லை. குடும்பமும், அதிகாரமுமே முக்கியம்” என்று பிரதமர் மோடி கூறினார்.