CSK- க்கு கேப்டனாகி இருக்க வேண்டியது நான் தான்; ஆனால் நடந்தது.. போட்டுடைத்த வீரர்!
சிஎஸ்கே அணியின் கேப்டனாக வேண்டியது நான் தான் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய 5 முறை கோப்பையை வென்றுள்ளது.
ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி விலகினார். மேலும், அந்த அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டார். இந்நிலையில் தோனிக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக வேண்டியது நான் தான் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் "ஐபிஎல் தொடங்கியபோது சிஎஸ்கே அணியின் கேப்டனாக்க அணி நிர்வாகம் எனக்கு அழைப்பு விடுத்தது.
சிஎஸ்கே கேப்டன்
இதற்காக வீரர்களை தேர்வு செய்த வி.பி.சந்திரசேகர், எனக்கு போன் செய்து, "சிஎஸ்கே அணியில் நீங்கள் விளையாட வேண்டும். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் அழைப்பை ஏற்க வேண்டாம்" என்று கூறினார்.
அதற்கு, சரி பார்க்கலாம் என்று மட்டும் நான் பதில் கூறினேன். இறுதியில் நான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றேன். ஒருவேளை நான் ஏலத்திற்கு சென்று இருந்தால் சிஎஸ்கே அணி என்னை வாங்கி இருக்கும். சிஎஸ்கே அணியின் கேப்டனாகியிருப்பேன். ஆனால், அதற்கு பிறகு அவர்கள் தோனியை ஏலத்தில் வாங்கியதோடு, அவரை கேப்டனாக்கினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.