CSK அணியில் ரோஹித் ஷர்மா; கேப்டனாக பார்க்கலாம் - முன்னாள் கேப்டன் உறுதி!
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் ஷர்மா குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேசியுள்ளார்.
ரோஹித் ஷர்மா
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டார். இந்த வருடம் அவர் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். தற்போது மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.
ஆனால், ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பாண்ட்யாவை கேப்டனாக நியமித்ததில் ரசிகர்களுக்கு உடன்பாடில்லை. இதனால் பாண்ட்யா எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் அதிருப்தி ஒளியை எழுப்பி வருகின்றனர்.
மேலும், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா வேறு அணிக்கு மாறக்கூடும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அளித்த பேட்டி ஒன்றில் ரோஹித் ஷர்மா குறித்து பேசியுள்ளார்.
கேப்டனாக பார்க்கலாம்
அவர் கூறியதாவது "தோனிக்கு மாற்றாக ரோஹித் ஷர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்வார் என்று நினைக்கிறேன். சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு மட்டுமே இருப்பார்.
அடுத்த ஆண்டு ரோஹித் ஷர்மாவை சென்னை அணியின் கேப்டனாக பார்க்கலாம். ஹர்திக் பாண்ட்யா தற்போது கடினமான காலகட்டத்தில் இருக்கிறார். இது அவரது தவறு கிடையாது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறீர்களா என்று அணி நிர்வாகம் கேட்டால் எந்த வீரர் தான் வேண்டாம் என்று சொல்வார்.
இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மாவை மும்பை அணியின் கேப்டனாக இந்த ஆண்டு நீட்டித்து இருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். ஹர்திக் பாண்ட்யாவை அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த ஆண்டில் கேப்டனாக நியமித்து இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.