நடிகர் ரஜினியின் அறிவுரை.. எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் பயப்பட வேண்டாம் - மு.க.ஸ்டாலின்!
இனம், மொழி, மாநிலம் காக்க எந்நாளும் உழைப்பதுதான் தலைவர் கலைஞருக்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
சென்னையில் நேற்று அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது . இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள் , மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இதையடுத்து விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்குச் சில அறிவுரைகளையும் கூறினார் .
பின்னர் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :என்னை விட ஒரு வயது பெரியவரான ரஜினியின் அறிவுரையை ஏற்றுக் கொள்கிறேன் . நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட வேண்டாம்; அனைத்திலும் நான் உஷாராகவே இருப்பேன். அனைவரையும் அரவணைத்தவர் கலைஞர் கருணாநிதி . அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களையும் அரவணைத்துச் சென்றவர் கலைஞர் கருணாநிதி.
மு.க.ஸ்டாலின்
கலைஞர் எழுதினால் தமிழ் கொட்டும் என்பது போல் கலைஞரைப் பற்றி எழுதினாலும் தமிழ் கொட்டும். உயிரினும் மேலாக உடன்பிறப்புகளை மதித்தவர் கலைஞர் கருணாநிதி.இவரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எந்தத் துறை கொடுத்தாலும் அவற்றின் பணியைச் சிறப்பாக முடிக்கும் எ.வ.வேலு, இன்று எழுத்திலும் வள்ளவர் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார்.
இந்தப் புத்தக்கத்தை படிக்கும் போது நான் உணர்ச்சிவசப்பட்டேன். மிசா நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது. இனம், மொழி, மாநிலம் காக்க எந்நாளும் உழைப்பதுதான் தலைவர் கலைஞருக்கு நாம் காட்டக்கூடிய உண்மையான நன்றியாகும். என்றும் இறவாத தாய் கலைஞர் வாழ்க! வாழ்க என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.