ஹைதராபாத் கூட்டு பாலியல் வன்கொடுமை: சிறுமியின் புகைப்படம் வெளியீடு..வலுக்கும் கண்டனம்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த மே 28-ம் தேதி 17 வயது சிறுமி ஒருவர் சக வயது சிறுவர்களுடன் கிளப் ஒன்றிற்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி அந்த சிறுவர்கள் சிகப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் காரில் அவரை கடத்தியுள்ளனர்.
காருக்குள் நடந்த கொடூரம்
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்துச்சென்ற அந்த சிறுவர்கள் காருக்குள்ளேயே வைத்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் எம்.எல்.ஏவின் மகன் என்பதும், மற்றொருவர் சிறுபான்மை கட்சி தலைவரின் மகன் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 18 வயதுடைய இளைஞர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் கிளப்பிற்கு வெளியில் இருந்து சிறுமியை அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகளின் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுது.
புகைப்படம் வெளியீடு
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ.க.வும், காங்கிரசும் வலியுறுத்தி வருகின்றன. இதனை தொடர்ந்து பா.ஜ.க-வை சேர்ந்த எம்.எல்.ஏ. ரகுநந்தன் ராவ் சில வினாடிகள் ஓட கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறுவன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து எம்.எல்.ஏ. ரகுநந்தன் ராவ் கூறும்போது, வீடியோவில் இடம்பெற்றுள்ள சிறுவனுக்கு வழக்கில் தொடர்பில்லை என போலீசார் அவசர அவசரமாக கூறுகின்றனர்.
அந்த சிறுவன் தெலுங்கானாவை ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரின் மகன். சிறுவனுக்கு இந்த வழக்கில் தொடர்பில்லை என போலீசார் கூறியுள்ள நிலையிலேயே, இந்த ஆதாரங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது என்றும் எம்.எல்.ஏ.வின் மகனுக்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளது என்பதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வலுக்கும் கண்டனம்
இந்நிலையில், இதற்கு தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர், பலாத்கார வழக்கின் குற்றவாளிகளில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வின் மகனும் உண்டு. இந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கும் வகையில் ரகுநந்தன் நியாயமற்ற ஒன்றை செய்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகளுக்கு இடையேயான புனிதமற்ற உறவால் இப்படி செய்யப்பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பிய எம்.பி. மாணிக் தாகூர் ஒரு சிறுமிக்கு கிடைக்கும் நீதியை விட உங்களது பிணைப்பு முக்கியத்துவம் பெற்று விட்டதா? என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
நிர்வாண நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு சிறுமி கொலை - போலீசார் விசாரணை!