பயங்கரவாதத்தின் பட்டத்து இளவரசர் - உயிரோடு இருக்கும் ஹம்சா பின்லேடன்? உளவுத்துறை ஷாக்!
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் தலிபான்களின் பாதுகாப்பில் உள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் இருந்தது. கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தற்கொலைப்படையினர், 4 பயணிகள் விமானங்களைக் கடத்தினர். இதில் 2 விமானங்களை இந்த கட்டிடங்களின் மீது மோதினர்.
இதில் இந்தக் கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இதில் 2,977 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டது அல்-காய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் தான்.
இதை எடுத்து உலக அளவில் தேடப்பட்டுவரும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒசாமா பின்லேடனை கொல்வதற்கு அமெரிக்கா பல நாடுகளில் தீவிர தேடுதல் வேட்டி நடத்தியது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை சுட்டுக்கொன்றது அமெரிக்க ராணுவம்.
இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மகன் ஹம்சா பின்லேடன் தீவிரவாத குழுக்களின் தலைமை பொறுப்பை ஏற்றார்.
ஹம்சா பின்லேடன்
அவ்வப்போது விடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அல்கொய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் அமெரிக்கப் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், ஹம்சா பின்லேடன் உயிருடன் இருப்பதாகவும், தலிபான்களின் பாதுகாப்பில் உள்ளதாகவும் உளவுத்துறையின் அறிக்கை ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில், அல்காய்தா இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைத்து, மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த ஹம்சா பின்லேடன் திட்டமிட்டுள்ளதாகவும்,இதற்கு அவருடைய சகோதரர் அப்துல்லா உதவியாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.