இங்க இருந்த தெருவை காணோம்; தீக்குளிப்பேன் - ஜிபி முத்து பரபரப்பு புகார்
காணாமல் போன தெருவை கண்டுபிடித்து தரவேண்டும் என்று ஜி.பி.முத்து மனு அளித்துள்ளார்.
ஜி.பி.முத்து
யூடியூப் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தொடர்ந்து சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி திருச்செந்தூர் - உடன்குடி, பெருமாள் புரத்தில் உள்ள கீழ தெருவை கண்டு பிடித்து தர கோரி நடிகர் ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காலன் குடியிருப்பு வருவாய் கிராமம் உடன்குடி, பெருமாள் புரத்தில் நத்தம் சர்வே எண் 233 ல் கீழ தெரு என்று ஒரு தெரு இருந்தது.
பரபரப்பு புகார்
நத்தம் சர்வே எண் 233 /21 இடம் முழுக்க அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வருவாய் துறை ஆவணங்களில் உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் சிட்டிசன் திரைபடத்தில் வரும் அத்திப்பட்டு கிராமம் காணாமல் போனது போன்று இந்த கீழ தெருவும் காணாமல் போய் விட்டது.
அந்த தெரு இருந்த இடம் முழுக்க பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு உள்ளது.
எனவே தாங்கள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி இடத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உடன்குடி பெருமாள் புரத்தில் காணாமல் போன கீழ தெருவை கண்டு பிடித்து தருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என தெரிவித்துள்ளார்.