தனியார் பேருந்துகளைஅரசு எடுத்து இயக்குவது ஆபத்தானது -ஓபிஎஸ் எச்சரிக்கை!
தீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து
தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கப் போகிறது என்றும், இதற்காக புதிய பேருந்துகளை வாங்கி, நிறுத்தி வைக்க முடியாது என்றும், கூடுதலாக ஊழியர்களை நியமிக்க முடியாது என்றும் தெரிவித்திருப்பதைப் பார்த்தால்,
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடுவிழா எடுக்க தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.இந்த நடைமுறை முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். இது மட்டுமல்லாமல், அரசிடம் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டுநர்கள் இல்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது.
அரசின் கொள்கைக் குறிப்பின்படி, தனியார் வசம் 7,764 பேருந்துகள் மட்டுமே உள்ள நிலையில், மிகப் பெரிய நிறுவனங்களாக விளங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கப் போகின்றன என்பது நகைப்புக்குரியதாக உள்ளது.
தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது.இது அரசுப் போக்குவரத்துக் கழகங்களை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கை. இது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், தனியார் பேருந்துகளின் நிலைமை, அந்த ஓட்டுநர்களுக்கு உள்ள அனுபவம் ஆகியவை குறித்து ஒரு தெளிவு இல்லாமல்,
ஆபத்தானது
தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது என்பது மிகவும் ஆபத்தானது. எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வசம் உள்ள அனைத்துப் பேருந்துகளையும் முழு வீச்சில் இயக்கி, மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றும்,
அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டுமென்றும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு வாங்கப்பட்ட புதிய பேருந்துகளின் எண்ணிக்கை,
புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை, கழிவு செய்யப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை, ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.