மாட்டுக் கோமிய மாநிலங்களில் பாஜக வெற்றி; முதல்வர் கண்டனம் - திமுக எம்.பி. மன்னிப்பு!
மாட்டுக் கோமிய மாநிலங்களில் பாஜக வெற்றி என திமுக எம்.பி சர்ச்சை கிளப்பியுள்ளார்.
பாஜக வெற்றி
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்த பாஜக, காங்கிரஸ் வசமிருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்தது.
இதில், தெலங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸும், மிசோராமில் ஜோரம் மக்கள் இயக்கமும் (ZPM) வெற்றி பெற்றது. இந்நிலையில், தேர்தல் குறித்து பேசிய திமுக எம்.பி செந்தில்குமார், ``இந்தி பேசப்படும் மாநிலங்களின் தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே பாஜக-வின் பலம் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும்.
எம்.பி. மன்னிப்பு
அதாவது, நாங்கள் மாட்டுக் கோமிய மாநிலங்கள் என அழைக்கும் மாநிலங்களில் உங்களால் (பாஜக) தென்னிந்தியாவுக்குள் நுழைய முடியாது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை நீங்களே பாருங்கள். இங்கு நாங்கள் பலமாக இருக்கிறோம்” எனச் சர்ச்சையாக பேசியிருந்தார்.
இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஆனதை தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் கண்டனமும் தெரிவித்தனர். அதனையடுத்து, செந்தில்குமார் எம்.பி `முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.
எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” என எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.