தொடரும் வன்முறை.. பேருந்துக்குள் புகுந்து டிரைவரை வெட்டிய மர்ம கும்பல் - என்ன நடந்தது?
மரம் கும்பல் டிரைவரை அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்து
திருநெல்வேலி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு பாபநாசத்திலிருந்து திருநெல்வேலியை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ரெஜின்(43) ஓட்டினார். அம்பாசமுத்திரம் அருகேயுள்ள இடைகால் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (40) நடத்துநராக இருந்தார்.
அப்பொழுது கல்லிடைக்குறிச்சிக்கு வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தை நடுவழியில் மறித்து பேருந்தில் ஏறியுள்ளார். அவரை ஓட்டுநர் கண்டித்துள்ளார், அதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மர்ம கும்பல்
இந்நிலையில், அந்த பேருந்து வீரவநல்லூருக்கு வந்ததும், அங்கு காத்திருந்த கும்பல் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியது. இதனால் காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று பாபநாசம் பணிமனையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், இந்த தாக்குதலை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டித்துள்ளார்.