வெளுத்து வாங்கும் கனமழை; கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
கனமழை காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கனமழை
மதுரையில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை ஆற்றின் நீர் அளவு அதிகரித்துள்ளது. முன்பு, வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மழை நீரும் ஆற்றுக்கு வருவதால், வைகை ஆற்றின் இரு கரைகளையும் தண்ணீர் நிரம்பிவழிகிறது.
இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும், கால்நடைகளை ஆற்றில் இறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது நாளாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முக்கிய எச்சரிக்கை
இதனால் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இணைப்பு சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தேனீ மாவட்டம் வைகை அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வைகை அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.