2 வருடத்திற்குப் பின்.. சேலத்தில் இருந்து விமான சேவை - எப்படி இருக்கும்?
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சேலத்திற்கு விமான சேவை தொடங்கியுள்ளது.
விமான சேவை
2018 ஆம் ஆண்டு சேலம் சென்னை இடையே, உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனாவுக்குப் பிறகு, பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இச்சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேலத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரு - சேலம் - கொச்சி வழித்தடத்தில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
மீண்டும் தொடக்கம்
வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமை தவிர மற்ற 5 நாட்களிலும் இந்த விமான சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்டிகோ நிறுவனம் சார்பில் 29-ந் தேதி முதல் பெங்களூரு - சேலம் - ஐதராபாத் வழித்தடத்திலும், மறுமார்க்கமாக மீண்டும் ஐதராபாத் - சேலம் - பெங்களூரு வழித்தடத்திலும் விமானம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், ஐதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்கு விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்தன. இதற்கான முன்பதிவுகளும் இரண்டு வாரங்களாக நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.