பசுமையான மலைகளால் சூழப்பட்ட சேலம் - மிஸ் பண்ணிடவே கூடாத முக்கிய இடங்கள்!
சேலம் மாவட்டம் நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டு மிகுந்த இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது. பழங்கால கோவில்கள் மற்றும் நகரத்தை சுற்றி பரவியிருக்கும் காலனித்துவ கால சர்ச்சுகளுக்கு பிரபலமானது. இந்த அழகான மற்றும் அமைதியான நகரம் திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு கட்டாயம் சென்று பார்க்ககூடிய இடங்களைப் பற்றி பார்ப்போம்...
ஏற்காடு
ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர்-4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. ஏற்காடு, ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கியதாகவும் வட்டத் தலைமையிடமாகவும் உள்ளது. மிகவும் சிக்கனமான மலைவாச தலமாகும். எனவே இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.
ஊத்துமலை
ஊத்துமலை மலையானது சேலத்தின் முக்கிய நகரத்திலிருந்து ஆறு கிமீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைதியான மலை, பசுமையான சூழலையும், அமைதியான சூழ்நிலையையும் கொண்டுள்ளது, இது வழிபாடு மற்றும் தியானத்திற்கு ஏற்றது.
சங்ககிரி கோட்டை
இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் கோட்டைகளுல் சங்ககிரி கோட்டையும் ஒன்றாகும். விஜயநகர பேரரசரால் 15 நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இதில், ஒரு தானியக்கிடங்கு, இரண்டு மசூதிகள், இரண்டு பெருமாள் கோவில்கள், ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நிர்வாகக்கட்டிடங்கள் மற்றும் கல்லறைகள் உள்ளன. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் இங்கே தூக்கிலிடப்பட்டார்.
ஒகனேக்கல்
தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையிலுள்ள இந்த ஊரில்தான் காவிரி நதி தமிழகத்திற்குள் நுழைகிறது. ஒகனேக்கல்லில் உள்ள அருவிகள் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. சேலத்திலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 133 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்த ஒகனேக்கல் மிகச் சிறப்பு வாய்ந்த சுற்றுலா ஸ்தலமாகும்.
1008 லிங்கம் கோயில்
நகரின் புறநகர் பகுதியான அரியானூரில் 1008 லிங்கம் கோயில் உள்ளது. இந்த தனித்துவமான கோவிலில் 1007 சிவலிங்கங்கள் உள்ளன, இது சிவனின் பிரதான கோவிலையும் மையத்தில் உள்ள முக்கிய சிவலிங்கத்தையும் சுற்றி உள்ளது. நீங்கள் கோயில் தளத்தில் ஒரு நாள் சுற்றுப்பயணம் செய்யலாம்.
மேட்டூர் அணை
இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக மேட்டூர் அணை உள்ளது மற்றும் சிறந்த சேலம் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. சேலத்திலிருந்து சுமார் 51 கிமீ தொலைவில் காவேரி ஆற்றின் மீது அமைந்துள்ளது. அணை 1934 இல் கட்டப்பட்டது. அதை முடிக்க ஒன்பது ஆண்டுகள் ஆனது. இந்த கம்பீரமான அணை 214 அடி உயரத்தில் உள்ளது மற்றும் அதன் அழகு மற்றும் நேர்த்திக்காக ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி சேலம் நகருக்கு அருகில் சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு விசித்திரமான நீர்வீழ்ச்சியாகும். சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி இங்கு வந்து சிறிது நேரம் அமைதியாக கழிக்கலாம். அருகில் உள்ள வனப்பகுதிகளில் அரிய புலம்பெயர்ந்த பறவைகளை தேடும் பறவை ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு புகைப்படக்காரர்கள் மத்தியில் இந்த இடம் பிரபலமானது.
கோட்டை மாரியம்மன் கோயில்
கோட்டை மாரியம்மன் கோயில் சேலம் நகருக்குள் அமைந்துள்ளது. மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். பல சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இங்கு வந்து வழிபடவும், முக்கிய தெய்வத்தின் தரிசனத்தைப் பெறவும் வருகிறார்கள். இந்த கோவிலில் ஒரு சிக்கலான வடிவமைக்கப்பட்ட கருவறை உள்ளது, அதைச் சுற்றி பல சிறிய கோயில்கள் உள்ளன.
குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா
குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா (Kurumbapatti Zoological Park)சேர்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மிருகக்காட்சி சாலை. இங்கு மென்மையான நிலப்பரப்பு, மூங்கில் மற்றும் வனப்பகுதி மற்றும் அரை வற்றாத நீரோடைகள் போன்றவை உள்ளன. வண்டலூர் பூங்காவிற்கு அடுத்தப்படியான பெரிய பூங்காவாக பார்க்கப்படுகிறது. பதினேழு இனங்களை சேர்ந்த 157 விலங்குகள் உள்ளன.