மக்களே கவனம் - முதல்முறை மனிதரின் உயிரைப் பறித்த பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பறவைக் காய்ச்சல்
மெக்சிகோவைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவர் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவற்றாலும் கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, மருத்துவ ஆய்வில் அவர் எச்5என்2 வகை பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது. மெக்சிகோவில் உள்ள சில பறவைகள் எச்5என்2 வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் உயிரிழப்பு
இது பறவைகளை, குறிப்பாக கோழிகளை பாதிக்கிறது. இது, மனிதர்களைத் தாக்குவது அரிதானது என்றாலும், பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது அசுத்தமான சூழல்களுடனான நேரடி தொடர்பு கொள்வது மூலம் இந்த தொற்று ஏற்படலாம்.
பாதிக்கப்பட்ட பறவைகள், அவற்றின் கழிவுகள் அல்லது அசுத்தமான சூழல் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு மூலம் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்படலாம். இது பொதுவாக கோழிப் பண்ணைகளில் வேலை செய்பவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு ஏற்படுகிறது.
பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை புண் மற்றும் சில நேரங்களில் கடுமையான சுவாச பிரச்சனைகள் ஆகியவை ஏற்படும். அரிதாக இருந்தாலும், மனித நோய்த்தொற்றுகள் தீவிரமாகி, உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.