இனி பாஸ்போர்ட் எடுத்துச்செல்ல தேவையில்லை.. உலகில் முதன்முறையாக டிஜிட்டலில் அறிமுகம்!
உலகில் முதன்முறையாக பின்லாந்து நாடு டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் பாஸ்போர்ட்
பின்லாந்து நாட்டில் உலகிலேயே முதன்முதலாக ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட்டால் ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் மனித தொடர்புகளின் தேவையைக் குறைத்து விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் நேரம் மிச்சமாகும்.
பின் ஏர், பின்னிஷ் போலீஸ் மற்றும் பின் ஏவியா விமான நிலைய ஆபரேட்டருடன் இணைந்து கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி இந்த திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கி உள்ளது. இது ஹெல்சின்கி நகரில் இருந்து இங்கிலாந்து திரும்பும் சில பின் ஏர் விமான பயணிகளிடம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
டி.சி.சி. பைலட் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பயணிகள் தங்கள் முக அங்கீகாரம் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளை சரிபார்க்க வேண்டும். பின்னர். பின்லாந்து எல்லைக்குட்பட்ட போலீசாருக்கு செயலி மூலம் இந்த தகவல்களை அனுப்ப வேண்டும்.
கையில் வைக்க அவசியமில்லை
இந்நிலையில், பயணிகள் பாஸ்போர்ட் தகவல்களை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு பாஸ்போர்டை கையிலேயே வைத்துக்கொள்ள அவசியமில்லை. இந்த திட்டம் சோதனை அடிப்படையில் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை செயல்படுத்தப்பட உள்ளது.
அதன் பின்னர்,இதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இதில் போலந்து, தென் கொரியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளும் இதே முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
எதிர்காலத்தில் பல இடங்களில் இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட் பயன்படுத்தப்படும். இதில் உள்ள ரிஸ்க், ஹேக்கர்கள் பாஸ்போர்ட் தரவுகளைத் திருடி அதை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனை தடுப்பது குறித்து பின்லாந்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.