முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு - என்ன காரணம்?
கே.பி.அன்பழகனின் மருமகள் தீ விபத்தால் உயிரிழந்துள்ளார்.
கே.பி.அன்பழகன்
அதிமுக ஆட்சியில் உயர்க் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தர்மபுரி, பாலகோடு தொகுதியில் கடந்த 2001 முதல் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
இவரது மகன் சசிமோகன் (32). பூர்ணிமா (30) என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி வீட்டில் பூர்ணிமா விளக்கு ஏற்றியுள்ளார்.
மருமகள் உயிரிழப்பு
அப்போது அவருடைய ஆடையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், 80 சதவீதம் தீக்காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சைப் பெற்றுவந்த நேரத்திலேயே, மாஜிஸ்திரேட் வாக்குமூலத்தின் படி மரணம் சந்தேகத்துக்குரியது கிடையாது எனத் தெரியவருகிறது.
தொடர்ந்து, திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் அந்தப் பகுதி வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தவுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.