பொம்மை முதல்வர் ஸ்டாலின்.. பொய்க்கு நோபல் பரிசு இருந்தால் அவருக்குதான் பொருந்தும் - EPS பதிலடி!
எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசியுள்ளார்.
அறிக்கை
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "திமுக தலைவர், பொம்மை முதல்வர் ஸ்டாலின், அவரது கட்சியினரிடம் வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் உள்ளிட்ட பணிகளைப் பற்றி பேசுவதில் எனக்கு ஆட்சேபனையில்லை.
ஆனால், எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதைப் பற்றி பேசாமல், அவருடைய பேச்சில், பாதிக்கும் மேல் என்னைப் பற்றி பேசியதில் இருந்தே, அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்பது நன்கு விளங்குகிறது.
பல திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்காமல் இன்றுவரை இழுத்தடித்துக் கொண்டிருப்பது என்று தமிழக மக்களிடையே பெரும் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்".
நோபல் பரிசு
இதனை தொடர்ந்து, "ஸ்டாலின் திருவண்ணாமலையில் அவரது கட்சியினரிடம் பேசும்போது, என்னை பச்சைப் பொய் பழனிசாமி என்று பேசியுள்ளார். பொய் பேசுவதில் கை தேர்ந்தவர் ஸ்டாலின். பொய் பேசுவதில் ‘நோபல் பரிசு’ கொடுப்பதாக அறிவித்தால், ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும்.
இனியாவது ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்தவிட்டு, தமிழகத்தில் நிலைமை என்ன, தமிழக மக்கள் திமுகவைப் பற்றியும், அவரைப் பற்றியும் என்ன பேசுகிறார்கள் என்று தனது காவல் துறையை வைத்து விசாரித்துவிட்டு,
இனியாவது உண்மையாகவே தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்தவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.