நாற்காலியை காப்பாற்றி கொள்ள..'ஆமாம் சாமி" போட்டவர் பழனிசாமி - முதலமைச்சர்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
”ஆமா சாமி”
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பா.ஜ.க.வின் தோல்விகளை பட்டியலிட வேண்டும் என்றால், 2014-ஆம் ஆண்டில் ரூ. 414-ஆக இருந்த சமையல் சிலிண்டரின் விலை தற்போது ரூ.918 ரூபாய் என்று தெரிவித்தார்.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72 ரூபாயாக இருந்து இப்போது ரூ.102 ரூபாய் என்றும் ரூ. 55-ஆக இருந்த டீசல் இப்போது ரூ.94 என்று சுட்டிக்காட்டிய அவர், இப்படி அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தையும் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், இவ்வளவு நாட்களாக பாஜக கூடவே இருந்து அவர்களின் மக்கள்விரோதச் செயல்கள் அனைத்திற்கும் ”ஆமா சாமி” போட்டவர் தான் பழனிசாமி என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்து, பாஜகவின் பாதம்தாங்கியாக பவனி வந்தார் என்று விமர்சனம் செய்தார்.
நாற்காலியை காப்பாற்றி...
மேலும், தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் டெல்லியில் அடகு வைத்தார் பழனிசாமி என்று குற்றம்சாட்டி, தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதிலேயே 4 ஆண்டுகளை ஓட்டிவிட்டார் என்றும் கூறினார்.
பாஜகவின் கூட்டணியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், மூன்று வேளாண் சட்டம், நீட் தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் நுழையவிட்டது, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றிய சட்டத்தை ஆதரித்தது, ஜி.எஸ்.டி.யை எதிர்க்காமல் மாநில நிதிநிலையை பாதாளத்துக்குத் தள்ளியது, தமிழ் மொழியைப் புறக்கணித்து இந்தித் திணிப்புக்கு உதவியது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் எடப்பாடி பழனிசாமி மீது முதலமைச்சர் வைத்தார்.
அதனால்தான் மக்களால் தோற்கடிக்கவும் பட்டார் என்று சுட்டிக்காட்டி, பாஜகவோடு சேர்ந்து சிறுபான்மைச் சகோதரர்களுக்கு செய்த துரோகத்தை மறைத்து இப்போது நாடகம் போடுவதாக தெரிவித்து, சிறுபான்மையின மக்கள் அவர் செய்த துரோகங்களை மறக்கவில்லை என்று கூறி, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் எல்லா இடத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ன கேட்டுக்கொண்டார்.