ராமர் கோயில் கட்டிவிட்டதால் மக்கள் பாஜகவினர் பின்னால் போய்விடுவார்களா? - எடப்பாடி பழனிசாமி!
ராமர் கோயில் கட்டிவிட்டதால் மக்கள் அனைவரும் பாஜகவினர் பின்னால் சென்றுவிடுவார்கள் என்பது தவறான கருத்து என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் "கோயிலை கட்டினால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றால் எடப்பாடியில் அதிமுக போட்டியின்றி வெற்றி பெறும், அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம்.
ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்கள் விருப்பமுள்ள கோயிலை கட்டி வருகின்றனர். அப்படி ஆலயம் எழுப்பினால் அனைவரும் அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது.
தவறான கருத்து
இந்திய நாடு பல்வேறு மதங்கள், சாதிகள் கொண்ட அமைப்பு. அவரவர்களுக்கு பிரியப்பட்ட கடவுளை வணங்குகின்றனர். கோயில் கட்டுபவர்கள் பின் மக்கள் அனைவரும் சென்று விடுவார்கள் என்று சொல்ல முடியாது.
ராமர் கோயில் கட்டிவிட்டதால் மக்கள் அனைவரும் பாஜகவினர் பின்னால் சென்றுவிடுவார்கள் என்பது தவறான கருத்து. வெவ்வேறு கருத்துக்கள் கொண்ட 26 கட்சிகள் கொண்ட கூட்டணி இந்தியா கூட்டணி.
அந்த அடிப்படையில் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவது கடினம். மேற்குவங்க முதல்வர் மம்தா கூட்டணியிலிருந்து விலகி விட்டதாக செய்திகள் வந்துள்ளது. இன்னும் யார் யாரெல்லாம் வெளியே போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.