VIVO நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!
சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான 'விவோ' தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதிரடி சோதனை
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி, உத்தரப் பிரதேசம், மேகலாயா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் உள்ள விவோ தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த விவோ விநியோக அமைப்பின் மீது, டெல்லி காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
அந்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத் துறையும் விவோ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது.
அதன் தொடர்ச்சியாகவே, விவோ தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
போலி நிறுவனங்கள் வழியாக பணப் பரிவர்த்தனை செய்யும் நோக்கில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
விவோ நிறுவனம் ஏற்கெனவே ஒரு வழக்கில் சிக்கி இருந்தது. அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், தாங்கள் தயாரிக்கும் போன்களுக்கு தனித்தனி ஐஎம்இஐ எண்ணை கொண்டிருக்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2017-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
தவறும்பட்சத்தில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், விவோ நிறுவனத்தின் 13,500 ஸ்மார்ட்போன்கள் ஒரே ஐஎம்இஐ எண்ணைக் கொண்டிருந்தது 2020-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதையடுத்து, உத்தரப் பிரதேச காவல் துறை, விவோ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது.
ரூ.5,551 கோடி முடக்கம்
இந்த ஆண்டில் அமலாக்கத் துறையின் சோதனைக்கு உள்ளாகும் இரண்டாவது நிறுவனம் விவோ நிறுவனமாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஷாவ்மி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
விதிக்குப் புறம்பான அந்நிய பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, அந்த நிறுவனத்திலிருந்து ரூ.5,551 கோடியை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
ஷாவ்மி நிறுவனம் உரிமத் தொகை என்ற பெயரில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள 3 நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்துள்ளது. ஆனால்,
ஷாவ்மி நிறுவனம் இந்தியாவிலேயே செல்போன்களையும், மூலப் பொருட்களையும் கொள்முதல் செய்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து அந்நிறுவனம் எவ்வித சேவையையும் பெறவில்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்தது.
சீன நிறுவனங்களுக்கு கெடுபிடி
2020-ம் ஆண்டு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வை அடுத்து, இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் மீதும், சீனத் தயாரிப்புகள் மீதும் மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது.
அந்த வகையில், கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் மீது மத்திய அரசு கெடுபிடி காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
பேருந்துகளில் முகக்கவசம் கட்டாயம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!