அவ்வளவு அழகு..! வனத்தில் குட்டியுடன் படுத்து உறங்கிய யானை குடும்பம் - வைரல் Video!
வனப்பகுதியில் யானைக் கூட்டம் ஒன்று புல்வெளியில் படுத்து உறங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
யானைக் கூட்டம்
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் மீண்டும் புற்கள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் உணவு தேடி குட்டியுடன் சென்ற யானைக் கூட்டம் உண்ட களைப்பில் புல்வெளிப் பகுதியில் படுத்து உறங்கியது.
இதனை கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத் துறையினர் ட்ரோன் மூலம் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதில், இதமான குளிர்ந்த சூழலில் பெரிய யானைகளின் பாதுகாப்பில் குட்டி யானை அழகாக உறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
சுப்ரியா சாஹு
இந்த வீடியோவை தமிழ்நாடு காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் கூடுதல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு பதிவிட்டுள்ளார். அதில் "தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த காடுகளில் எங்கோ ஒரு அழகான யானைக் குடும்பம் ஆனந்தமாக உறங்குகிறது.
குட்டி யானைக்கு குடும்பத்தால் `இசட் பிரிவு' பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை கவனியுங்கள். இவை நமது சொந்த குடும்பம் போலவே உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.