இவர்கள் திருமலைக்கு வரவேண்டாம் - திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
பாதயாத்திரையாக முதியோர் திருமலைக்கு வரவேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாதயாத்திரை
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இதில் பலர் அலிபிரி மற்றும் ஸ்ரீநிவாச மங்காபுரம் அருகே உள்ள ஸ்ரீவாரி மெட்டு வழியாக மலையேறிச் சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் 60 வயது நிரம்பிய முதியோர், சர்க்கரை நோயாளிகள், ரத்தக் கொதிப்பு, வலிப்பு நோய், மூட்டு வியாதி உள்ளவர்கள் தயவுசெய்து பாதயாத்திரையாக திருமலைக்கு வர வேண்டாம். அதிக உடல் பருமன் மற்றும் இதய வியாதி உள்ளவர்களும் திருமலைக்கு நடந்து செல்வது கூடாது.
தேவஸ்தானம் வேண்டுகோள்
திருமலை கடல் மட்டத்தை விட அதிக உயரம் கொண்டது என்பதால், இதய நோய், உடல் பருமன் உள்ளவர்கள் மலை ஏற, ஏற ஆக்ஸிஜன் பிரச்சினை வரும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வழியில் உடல்நலப் பிரச்சினைகள் வந்தால்,
அலிபிரி மார்க்கத்தில் 1500-வது படி அருகேயும், காலி கோபுரம் (Gali Gopuram), ராமானுஜர் சன்னதி அருகேயும் மருத்துவ முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. திருமலையில் அஸ்வினி தேவஸ்தான மருத்துவ மனை உட்பட பல மருத்துவ மனைகள் இரவும், பகலும் பணியாற்றி வருகின்றன.
சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்கு திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.