கள்ள கூட்டணி; முழு சங்கியாக மாறிய எடப்பாடி பழனிசாமி - உதயநிதி பரபர பேச்சு
எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறிவிட்டார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக-பாஜக
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை கலைஞர் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 41 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
13,000 பாக முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, தேர்தல் ரேஸில் நாம் இறங்கி, அதுவும் முன்வரிசையில் யாராலும் பிடிக்க முடியாது அளவுக்கு முதல் இடத்தில் போய்க்கொண்டிருக்கிறோம்.
இதையெல்லாம் பார்த்துத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்குப் பதற்றம் வந்துவிட்டது. `இந்து சமய அறநிலையத்துறையே இருக்கக் கூடாது’ என்று சொல்கிற பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்திருப்பதால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியும் முழு சங்கியாக மாறிவிட்டார்.
உதய் உறுதி
அவரின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு வந்ததால், `நான் அப்படிப் பேசவில்லை; இப்படிப் பேசவில்லை’ என மழுப்புகிறார். பிரசாரத்தை ஆரம்பித்தபோது, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையோடுதான் இருந்தார். இன்றைக்கு முழுக் காவி சாயத்துடன் இருக்கிறார்.
இனி, அதை மூடிமறைத்து எந்தப் பயனும் கிடையாது. எடப்பாடி பழனிசாமி அவர்களே, நீங்கள் தமிழ்நாட்டுக்குள் பா.ஜ.க-வுக்குப் பாதை போட்டுக்கொடுக்கலாம் என்று பார்க்கிறீர்கள். உங்களைத் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
உங்களின் அந்த எண்ணத்தை கருப்பு, சிவப்பு வேட்டிக் கட்டிய எங்களின் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் நிச்சயம் தடுப்பார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் நின்று அடிமைகளையும், பாசிஸ்ட்களையும் வீழ்த்தப் போவது உறுதி’ என பேசியுள்ளார்.