24 குடும்பங்களிடமும் முதல்வர் Sorry கேட்க வேண்டும் - ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேச்சு
அஜித் குமார் கொலை வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு, இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது எனவும், அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
விஜய் பேச்சு
இந்நிலையில், அஜித்குமார் கொல்லப்பட்டத்தை கண்டித்து, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், சென்னை சிவானந்தா சாலையில், தவெக தலைவர் விஜய் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய விஜய், "திமுக ஆட்சியில் காவல்துறையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேரின் குடும்பத்தினரிடமும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்பாரா? தயவுசெய்து அவர்களிடமும் சாரி சொல்லிடுங்க. அஜித் குடும்பத்துக்கு கொடுத்த மாதிரி இந்த 24 பேரின் குடும்பங்களுக்கும் ஏன் நிதி கொடுக்கவில்லை?
ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கை சிபிஐக்கு மாற்றிபோது விமர்சித்தீர்களே. இப்போது ஏன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினீர்கள். இப்போதும் சிபிஐ, ஆர்எஸ்எஸ் - பாஜகவின் கைப்பாவையாகத்தானே இருக்கிறது.
நாங்கள் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை கேட்டதால் பயந்து போய் சிபிஐக்கு மாற்றியிருக்கிறீர்கள். அனைத்திலும் நீதிமன்றம் தலையிடும் என்றால் தமிழகத்தில் ஆட்சி எதற்கு? திராவிட மாடல் வெற்று விளம்பர அரசு Sorryம்மா அரசாக மாறிவிட்டது" என பேசினார்.