பந்தயத்தில் கட்சிக்காக காலை வெட்டிய தொண்டர் - சசிகலா, எடப்பாடி பழனிசாமி செய்த செயல்
தேர்தலில் தோற்றதால் பந்தயத்துக்காக அதிமுக தொண்டர் காலை வெட்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வகுமார்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரவியபுரம் பகுதியில் செல்வகுமார் (75) என்பவர் வசித்து வருகிறார். மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளியான இவர், 1972 ம் ஆண்டு முதல் அதிமுக கட்சியின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 30 இடங்களில் வெற்றி பெறும் என செல்வகுமார் அங்கு உள்ள ஒரு டீக்கடையில் வைத்து பேசியுள்ளார்.
அதற்கு அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது, திமுக தான் வெற்றி பெறும் என்று அங்கிருந்த ஒருவர் கூறியுள்ளார். இதனால் அதிமுக தோல்வி அடைந்தால் தன்னுடைய ஒரு காலை வெட்டுகிறேன் என செல்வக்குமார் கூறியுள்ளார்.
சசிகலா
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், அரிவாளால் தனது வலது காலில் லேசாக வெட்டினார். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவரை சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். "நிச்சயம் ஜெயலலிதா பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற அதிமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும்.. சின்னம்மா நான் பார்த்துக் கொள்கிறேன்.. அதிமுக தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம், தொண்டர்கள் யாரும் இதுபோல செய்யக்கூடாது" என பேசினார்.
எடப்பாடி பழனிச்சாமி
இந்த விவகாரத்தை கேள்விப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடியில் உள்ள கட்சியினர் மூலம் செல்வகுமாரை சேலத்திற்கு வரவழைத்து, தனது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார்.
அவருக்கு நிதி உதவி வழங்கி விட்டு, "அதிமுக நிச்சயம் சோதனைகளில் இருந்து வெளிவரும் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது" என அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.