இனி.. ரயில் நிலையங்களில் மீல்ஸ் ரூ.20க்கு விற்பனை - விவரம் இதோ!
எகானமி மீல்ஸ் என்ற பெயரில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
எகானமி மீல்ஸ்
கோடை விடுமுறை என்பதால் ரயிலில் பயணிகளின் பயணம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, முன்பதிவு செய்யாத பெட்டிகளில் அதிக பயணிகள் பயணம் செய்வார்கள்.
எனவே, அவர்களுக்காக மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை, இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அறிவிப்பு
அதன்படி, 200 கிராம் எடைக் கொண்ட தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளில் ஏதேனும் ஒன்று எகானமி மீல்ஸ் என்ற பெயரிலும், 325 கிராம் எடைக் கொண்ட பூரி மசாலா மற்றும் பஜ்ஜி ஆனது ஜனதா கானா என்ற பெயரிலும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
350 கிராம் எடையுள்ள மசால் தோசை உட்பட தென்னிந்திய உணவு வகைகள் ஆனது ஸ்னாக் மீல்ஸ் என்ற பெயரில் 50 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. மேலும், 200 மி.லி. தண்ணீர் பாட்டில் ரூ.3க்கு விற்பனை செய்யப்படும்.
தொடர்ந்து, ரயில் பயணிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் இந்த உணவுகளை வாங்கும் வகையில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளுக்கு அருகில் நடைமேடைகளில் இந்த உணவுகளுக்கான கவுன்ட்டர்கள் அமைக்கப்பட உள்ளன என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.