மின் கட்டணத்தை தொடர்ந்து.. இந்த கட்டணமும் உயர்வு - விவரம் இதோ!
மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
மின்சார சேவை கட்டணம்
தமிழ்நாட்டில் வீடு, வணிக மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டது.
இருப்பினும், முதல் 100 யூனிட்டுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 15-ம் தேதி முதல், புதிய இணைப்பு கட்டணம், மீட்டருக்கான வைப்புத் தொகை, பதிவு, மேம்பாட்டு கட்டணம் ஆகியவற்றுக்கான சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
உயர்வு
அந்த வகையில், வீட்டு உபயோகம், குடியிருப்புகளுக்கான பொது மின்உபயோகம், அரசு கட்டிடங்கள், விசைத்தறி, தொழில் பிரிவுகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ.1,020 ஆக இருந்த கட்டணம் ரூ.1,070 ஆகவும்,
மும்முனை இணைப்புக்கு ரூ.1,535 ஆக இருந்த கட்டணம் ரூ.1,610 ஆகவும், 50கிலோவாட் முதல் 150 கிலோவாட் வரையிலான பயன்பாட்டுக்கு ரூ.2,045 ஆக இருந்த கட்டணம்ரூ.2,145 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
உயர் மின்அழுத்த இணைப்புகளுக்கான மீட்டர் வாடகையும் ரூ.3,780-ல் இருந்து ரூ.3,965 ஆக உயர்ந்துள்ளது.
மின்சார இணைப்புக்கான பெயர் மாற்றத்துக்கு ரூ.615-ல் இருந்து ரூ.645 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.