தமிழகத்தை போதைப்பொருட்களின் வணிக மையமாக மாற்றிய திமுக அரசு - டிடிவி தினகரன் கண்டனம்!
சட்டம், ஒழுங்கு பிரச்னைகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கியுள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தால் எதிர்காலத்தை இழக்கும் இளைஞர் சமுதாயம் - ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி என இரு கட்சிகளும் போதைப் பொருள் நடமாட்டத்தை ஊக்குவிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தொடங்கி மாநிலத்தின் மூலை முடுக்குகளெங்கும் தாராளமாக கிடைக்கும் கொடிய வகை போதைப் பொருட்களுக்கு இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் அடிமையாகி வருவதாக நாள்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் மிகுந்த கவலையையும் வேதனையையும் அளிக்கின்றன.
வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 22 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல், கோவையில் மருந்து குப்பிக்குள் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை ஊசிகள் என போதைப்பொருட்களின் வணிக மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
வலியுறுத்தல்
போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கில் தொடங்கி, திமுகவின் பிரமுகர்கள் பலருக்கு போதைப் பொருள் கடத்தல் விற்பனையில் தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில்,
தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளராகவும் அவருக்கு நெருக்கமாக இருந்தவரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணி அமைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்கிறார்களோ என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப் பொருட்களின் நடமாட்டத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து கொண்டிருப்பதோடு, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என நாள்தோறும் அரங்கேறும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை அடியோடு அழித்தொழிப்பதோடு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல் போதைப் பொருள் கடத்தலுக்கு உறுதுணையாக செயல்படுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்