அதிமுகவில் மீண்டும் ஓ.பி.எஸ்..? ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு பேட்டி!
அதிமுகவில் மீண்டும் ஓ.பி.எஸ் இணைவது தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஆர்.பி. உதயகுமார்
மதுரையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் "அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய போவதாக சிலர் வதந்தியை பரப்புகிறார்களே அது உண்மையா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆர்.பி. உதயகுமார் "அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் துளியும் உண்மையில்லை. உச்சபட்ச பாவச் செயலாக இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக ஒற்றை தொகுதிக்காக சுயேச்சையாக ராமநாதபுரத்தில் போட்டியிட்டது எந்த வகையில் நியாயம்.
இது போன்று தொடர்ந்து கட்சிக்கு அவர் எத்தனை பாவச் செயல்களை செய்வோரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஓ. பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் அதிமுக பின்னோக்கி சென்றது. தனக்குப் பதவி இல்லை என்பதால் அதிமுகவை பிரிக்க திட்டமிட்டார்.
அதிமுகவின் வெற்றி
கட்சியின் முக்கியத்துவம் மற்றும் நலன் கருதி ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டார். ஆனால், அவர் அதிமுகவின் முக்கிய முடிவுகளில் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மௌனம் காப்பார்.
கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றது அதிமுகவின் வெற்றி. அது ஓ. பன்னீர்செல்வத்தின் வெற்றி அல்ல. பதவி பறிபோகிறது என்பதால் கட்சி பிரிவுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது ஓ. பன்னீர்செல்வம் தான். அதிமுக தனது வரலாற்றில் அதிக அளவில் வழக்குகளை சந்தித்ததில்லை.
ஆனால் அதிமுக ஏராளமான வழக்குகளை சந்திக்க வைத்தவர் ஓ.பன்னீர் செல்வம். இவர் தனது சுய லாபத்துக்காகவும் பதவிக்காகவும் அதிமுக மீது பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்தார். அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். இணைவதாக வரும் தகவலுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.