போதைப் பொருட்களின் நடமாட்டத்தை திமுக அரசு கட்டுப்படுத்தாதே விபத்து, உயிரிழப்புக்கு காரணம்- டிடிவி தினகரன்!
போதைப் பொருட்களின் நடமாட்டத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதன் விளைவே விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படக் காரணம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "சென்னை அண்ணாநகரில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
அதே விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதையின் காரணமாகவே அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன்.
தலைநகர் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதன் விளைவே இது போன்ற விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வலியுறுத்தல்
எனவே, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவர் மத்தியிலும் தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு,
அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.