டிரைவரே இல்லாத மெட்ரோ ரயில்; அதுவும் சென்னையில்.. எப்போ வருது தெரியுமா?
மெட்ரோ நிறுவன அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
மெட்ரோ ரயில்
சென்னையில் மெட்ரோ ரயில்களின் தேவை அதிகரித்தபடியே வருகிறது. தற்போது 63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2025ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்
மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5) காரிடர்களுக்கு இந்த டிரைவரில்லாத மெட்ரோ ரயில்கள் வாங்கப்பட உள்ளது.
இந்த ரயில்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து இயங்க உள்ளது.
ஒரு வருட சோதனைகளுக்கு பிறகே பொது பயன்பாட்டிற்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.